Sunday, March 3, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 221 பக்தி வழி

நாரதர் தனக்குச் செய்த உபதேசம் பற்றியும், அதைத் தான் பெற்ற விதத்தையும் அசுரக் குழந்தைகளிடம் கூறினான் ப்ரஹலாதன்.

முன்பே ஹிரண்யகசிபுவும், சண்டாமர்க்கர்களும் இந்த அறிவு உனக்கு எவ்வாறு வந்தது என்று கேட்டனரே. அப்போது அந்தர்யாமியாக இருக்கும் பகவானால் வந்தது என்று கூறினானே.

இப்போது தன் நண்பர்களிடம், நாரதர் சொன்னார் என்கிறானே. பொய் சொல்கிறானோ? என்ற சந்தேகம் எழுமாயின் அது அவ்வாறல்ல.

தந்தையிடம், நாரதர் பெயரைச் சொன்னால், அவன் உடனே அவரை அழைத்துத் துன்புறுத்துவான். மேலும், தான் இல்லாத நேரத்தில், தேவேந்திரன் தன் மனைவியைச் சிறையெடுத்தான் என்று தெரிந்தால், அவ்வளவுதான். ஏற்கனவே தேவர்களைப் படாத பாடு படுத்திக் கொண்டிருக்கும் ஹிரண்யகசிபு, இச்செய்தி தெரிந்தால் அவர்களை என்ன செய்வான் என்று அனுமானிக்கக்கூட இயலாது.

மேலும், நாரதர் உபதேசம் செய்த உடனேயே ஞானம் வந்துவிட்டது அந்த தெய்வக் குழந்தைக்கு. அதனால் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைக் காணத் துவங்கிவிட்டான்.

குருவுருவும் ஹரி உருவும்
ஓருருவாகுமே

என்பதற்கிணங்க, நாரதரை குருவுருவில் வந்த ஹரியாகவே கண்டதனால், குரு வேறு, ஹரி வேறு என்ற எண்ணமே அவனுக்கு இல்லாததால் தந்தையிடம் பகவானால் வந்தது என்று சொன்னான்.

ஒரு உண்மையான சீடன், தனக்கு ஞானம் வழங்கிய குருவை பிரகாசப்படுத்த வேண்டும். அசுரச் சிறுவர்களுக்குத் தான் நல்வழியைப் போதிப்பதால் அவர்கள் தன்னை குருவாக நினைக்கக்கூடும். எனவே குருவான நாரதர் எடுத்துக்கூறினார் என்று சொன்னால், அவர்களும் அந்த மஹாத்மாவை குருவாக ஏற்பர்.

மேலும், நாமகீர்த்தனம் ஏதோ தனக்கு ஹ்ருதயத்தில் உதித்து, தானே கண்டுபிடித்த வழி அல்ல. நாரதர் போன்ற மஹான்கள் காட்டிய வழி, எனவே ஐயமின்றிப் பின்பற்றலாம்  என்பதை வலியுறுத்தவும் நண்பர்களிடம் ப்ரஹலாதன் நாரதரைப் பற்றிக் கூறுகிறான்.

ப்ரஹலாதன் கூறலானான்.
நீங்கள் என் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு நான் சொல்வதைக் கேளுங்கள். இதனால் உங்களுக்கு ஞானம் ஏற்படும். யான், எனது என்ற பற்று அறவே நீங்கும்.

கால ஸ்வரூபனான பகவானின் கட்டளையால்தான் உலகில் ஒவ்வொரு விஷயமும் காலத்தே நடக்கின்றன. மரங்கள் வளர்ந்து, காய்த்து, பழுக்கின்றன. அதுபோலவே பிறப்பு, வளர்தல், மாற்றம், மெலிதல், இறப்பு, அழிதல் ஆகியவை இவ்வுடலுக்குத் தானே தவிர, ஆன்மாவிற்கல்ல.

பழத்திற்கும், உடலுக்கும் பல மாறுபாடுகள் உண்டு. ஆன்மாவிற்கும், மரத்திற்கும் மாறுபாடு இல்லை.

ஆன்மா அழியாதது.

 மாறுபாடற்றது.

 தூய்மையானது.

 இரண்டற்றது.

 ஒன்றானது.

ஜடமான இவ்வுடல் தானல்ல என்று அறிவுடையது.

மண் விண் அனைத்திற்கும் ஆதாரமானது.

செயல் தொடர்பற்றது.

 தன்னொளி கொண்டது.

 திசை, தேச, காலங்களால் அளவிட முடியாதது.

 நீக்கமற நிறைந்துள்ளது.

 ஒளிவு மறைவற்றது.

பகுத்தறியக் காரணமானது.

ஆன்மா இவ்வுடலினும் வேறானது.

ஒரு முத்து மாலையில் மணிகளினூடே நூல் நுழைந்திருப்பதுபோல், உடல்களினுள் நுழைந்திருக்கும் ஆன்மா உண்மையில் அவற்றினின்று தனித்து விளங்குகிறது.

விழித்திருத்தல், உறக்கம், கனவு ஆகிய மூன்று நிலைகளுக்கும் சாட்சியாக எது நிற்கிறதோ, அதுதான் பரமாத்மா.

முக்குணங்களின் கலப்பாலும், கர்மவினைகளாலும் பிறவி ஏற்படுகிறது. புத்தியின் பரிமாணங்களை விலக்கி உண்மையைக் கண்டால் ஆன்மாவின் நிலை விளங்கும்.

கனவு காணும் வரையில் மகிழ்ச்சி நீடிக்கும்.  இந்த ஆன்ம அறிவைப் பெற இந்த அஞ்ஞானம் நிரம்பிய உலகில் வாழ்ந்துதான் ஆகவேண்டும்.
என்று கூறினான்.

ஒரு ஞானி எப்படி இருந்தாலும் ஆன்ம அழகு அவரிடம்‌ மிளிர்வதால், அவரது திருமேனி, நடை உடை பாவனைகள், பேச்சு, காரியம் செய்யும் விதம் அனைத்துமே மிக அழகாக மிளிரும்.

ஒரு ஞானியின் ஸந்நிதியில் எதுமே செய்யாமல் சும்மா விழுந்து கிடந்தாலும் போதும். அந்த ஜீவன் கரையேறிவிடும். அப்படித்தானே ரமணரின் பார்வையில் விழுந்துகிடந்தனர் அவரது பக்தர்கள்!

ப்ரஹாலதனின் தேஜஸ், அழகு, அவன் கை கால்களை அசைத்துப் பேசுவது, அவனது முக பாவம், பேசும்போது அவனது கொவ்வைப்பழ இதழ்கள் குவிந்து விரிவது ஆகிவற்றையே ஆவென்று பார்த்துக் கொண்டிருந்த அசுரச் சிறுவர்களுக்கு அவன் சொன்னது ஒன்றும் விளங்கவில்லை.

அவர்களது முகக் குறிப்பை உணர்ந்த ப்ரஹலாதன் மந்தஹாசம் செய்தான். பின்னர், நீங்கள் முதலில் செய்ய வேண்டிய காரியம் எது தெரியுமா?
என்றான்.

உடனே, முதல்ல அதைச் சொல்லு ப்ரஹலாதா என்றனர் குழந்தைகள்.

கர்மவினைகளை வேரோடு களைய பல்லாயிரக்கணக்கான வழிகள் உள்ளன. ஆனால், அவற்றுள் நமக்கு எது சுலபமாக இயல்பாக வருமோ அந்த பக்தி வழியில் நாம் செல்லவேண்டும்.

அந்த பக்தி யோகத்தை பகவானே உபதேசம்‌ செய்திருக்கிறார்.

பக்தி யோகத்தின் அங்கங்கள்

குருவிற்குப் பணிவிடை செய்தல்,

அவரிடம் மாறாத அன்பு கொள்ளுதல்,

எது கிடைத்தாலும் அதை இறைவனுக்கு அர்ப்பணித்தல்,

 மானசீகமாகவோ, நடைமுறையிலோ பகவானுக்குப் பூஜை செய்தல்,

பகவானின் கதைகள், குணங்களை மன ஒருமைப்பாட்டுடன் கேட்டல்,

ஹரியின் திருவடித் தாமரைகளை ஹ்ருதயத்தில் நிறுத்துதல்,

அவரது அர்ச்சாவதாரத் திருமேனிகளை தரிசனம் செய்தல், 

பகவானின் திருநாமங்களை வெட்கத்தை விட்டுக் கீர்த்தனம் செய்தல் ஆகியவை.

நண்பர்களே.. இப்போது நம்மால் இயன்றது பகவானின் நாமங்களைக் கீர்த்தனம் செய்வதுதான். வாருங்கள். அதைச் செய்வோம்.
என்றழைத்தான்.

தேமதுரக் குரலில் நாராயண நாமத்தை ப்ரஹலாதன் கீர்த்தனம் செய்துகொண்டு, இரு கைகளையும் உயரத் தூக்கி ஆடத்துவங்க, அசுரக் குழந்தைகள் அனைவரும்

அவனைச் சுற்றி வலம் வந்து நாராயண நாராயண என்று பாடிக்கொண்டு ஆடத்துவங்கினர்.


அந்த ஆசிரமம் முழுவதும் நாராயண நாமம் இனிதே ஒலித்தது.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment