Monday, February 25, 2019

ஸ்ரீமத் பாகவத பழம் - 217 கொல்லத் துணிந்த தந்தை

நவவித பக்தி சாதனங்களைப் பற்றி தந்தைக்கு மிக அழகாக எடுத்துக் கூறினான் ப்ரஹலாதன்.

அதைக் கேட்ட ஹிரண்ய கசிபுவுக்கோ, கோபம் தலைக்கேறியது.

சண்டாமர்க்கர்களைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தான்.

ஹே! அயோக்யர்களே! உண்ட வீட்டிற்கே இரண்டகமா? என் மகனுக்கு எதெதையோ கற்பித்திருக்கிறீர்களே. நீங்கள் பகவானின் கட்சியா? வேண்டியவர் போல் நடித்து உள்ளே பகை பாராட்டும் தீயோர்களே! என்று கர்ஜனை செய்தான்.

சுக்ராசார்யாரின் புதல்வர்கள் அரசனைக் கண்டு மிகவும்  பயந்தார்கள்.

அரசே! இதையெல்லாம் நாங்கள் சொல்லித்தரவில்லை. வேறெவரும் கூடக் கற்பிக்கவில்லை. இவனுக்கு இந்த புத்தி இயல்பாகவே இருக்கிறது. வீணாக எங்கள் மேல் குற்றம் சொல்லாதீர்கள். என்றனர்.

உடனே, ஹிரண்யகசிபு, ப்ரஹலாதனைப் பார்த்து, குரு சொல்லித் தராவிட்டால், உனக்கெப்படியடா இவ்விஷயங்கள் தெரிந்தது? என்றான்.

ப்ரஹலாதனோ,

அப்பா! மக்கள் உலகியல் விஷயங்களையே அரைத்த மாவை அரைப்பது போல் சுற்றி சுற்றி வருகின்றனர். புலன்களை வசப்படுத்தாவிடில், ஆசை தீரவே தீராது. மனைவி, மக்கள், வீடு, வாசல் என்று பற்று கொண்டவர்களுக்கு, பகவத் பக்தி, எடுத்துக் கூறினாலும் வராது.

ஒரு குருடன் வழிகாட்ட, அவனைத் தொடர்ந்து செல்லும் குருடன்போல், சம்சாரப் படுகுழியில் வீழ்வர். உலகியல் ஆசைகளால் கெட்டுப்போன அந்தக்கரணத்தை உடையவர்களுக்கு ஸ்ரீமன் நாராயணனே இம்மையும், மறுமைக்கும் பற்றாவான் என்பது தெரியாது.

யாருடைய மனம் பகவானின் சரணங்களில் ஈடுபடுகிறதோ, அவருக்கு பிறப்பு இறப்புக் கேடுகள் முற்றிலும் அழிகின்றன. அடியார்களின் திருவடிகளில் புரண்டு அழாதவர்களின் மனம் விஷயச் சேற்றில் அமிழும்.
என்றான்.

அதனைக் கேட்ட ஹிரண்யகசிபு, கடுங்கோபம் கொண்டு குழந்தை ப்ரஹலாதனை மடியிலிருந்து தூக்கி எறிந்தான்.

அசுரர்களே! இவனைக் கொல்லுங்கள். இவன் தன் சிற்றப்பனைக் கொன்றவனைத் தொழுகிறான். ஒருக்கால், என் தம்பியைக் கொன்ற அந்த விஷ்ணுவே இவன் உருவில் வந்தானோ?
ஐந்து வயதிலேயே நன்றி மறந்து பகைவன் புகழ் பாடுகிறான்.

உறவினன் இல்லாவிடினும் நோய் போக்கும் மருந்துபோல் உதவி செய்தால் அவன் மகனைப் போன்றவனே. மகனே ஆனாலும், தீமை செய்தால் அவன் நோய் போன்றவன். பகைவன்.

நம் உடலிலேயே ஏதேனும் உறுப்புகளால் தீங்கு நேருமாயின் அதை அகற்றவேண்டும். அபோதுதான் மற்ற உறுப்புகள் நலமுடன் இயங்கும்.

இவனை ஏதாவது உபாயம்‌ செய்து கொல்லுங்கள்‌ என்றான் ஹிரண்யகசிபு.

உடனே மிக பயங்கரமான உருவம் கொண்ட அசுரர்கள் கையில் சூலங்களை எடுத்துக்கொண்டு ஓடிவந்து ப்ரஹலாதனைப் பலமுறை குத்தினர். ப்ரஹலாதனின் மனமோ ஸ்ரீமன் நாராயணனிடம் லயித்திருந்தது. எனவே, குத்தியதெல்லாம் பயனற்றுப்போயின.

உடனே ஹிரண்யகசிபு மிகவும் ஐயமுற்று, மற்ற உபாயங்களைக் கொண்டு அவனைக் கொல்லச் சொன்னான்.

மதங்கொண்ட யானைகளால் மிதிக்கச் செய்தான். யானையோ சிறுவனை வணங்கிற்று.

விஷநாகங்களால் கடிக்கச் செய்தான். விஷம் ஒன்றும் செய்யவில்லை.


ஆபிசாரம் செய்து ஒரு அரக்கியை குழந்தை மீது ஏவினான். அவளால் ப்ரஹலாதனை நெருங்கக்கூட முடியவில்லை. தூக்கி எறியப்பட்டாள்.

மலை உச்சியிலிருந்து உருட்டிவிட, பூமாதேவி அஞ்சினாள். தன்னால் பக்த சிரோமணியான  இக்குழந்தைக்கு அடிபடக்கூடாதென்று பூப்போல் ப்ரஹலாதனைத் தாங்கினாள்.

சம்பராசுரனை விட்டு ‌பல மாயைகளை ஏவினான். குழந்தையின் முகத்தில் சிரிப்புகூட மாறவில்லை. அஞ்சுவதெப்படி?

இருள் சூழ்ந்த பாதாளச் சிறையில் அடைத்தான். ப்ரஹலாதன் தனிமையில்  ஆனந்தமாக கீர்த்தனம் செய்ய ஆரம்பித்தான்.

அன்னை கையாலேயே விஷம்‌ கொடுத்தான். அமுதம் உண்டவனைப்போல் ஒளிமிக்கவனாய் விளங்கினான் ப்ரஹலாதன்.

உணவு கொடுக்காமல் பட்டினி போட்டான். சரீரம் தான் என்ற எண்ணமில்லாதவனுக்கு பட்டினியும், விருந்தும் ஒன்றே. ப்ரஹலாதனின் சக்தி குறையவில்லை. முக மலர்ச்சியுடன் விளங்கினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

No comments:

Post a Comment