தன் கடைசிப் பையனின் மேல் வைத்த அளவற்ற பாசத்தால் எப்போதும் அவனையே நினைந்து அவன் பெயரையே சொல்லிக் கொண்டிருந்தான் அஜாமிளன். எண்பத்தெட்டு வயதில் காலன் அழைத்தபோதும் மகனையே அழைத்தான். மகன் அலட்சியம் செய்தாலும், பகவானால் அவன்குரலை அலட்சியம் செய்ய முடியவில்லை.
விஷ்ணுவின் பார்ஷதர்கள் நால்வர் ஓடோடி வந்தனர்.
பாசக்கயிற்றைப் போட்டு அஜாமிளனின் உயிரை இழுக்கும் யமதூதர்களைத் தடுத்தனர்.
யமதூதர்கள் கேட்டனர்.
யமதர்மராஜனின் தூதர்களாகிய எங்களைத் தடுக்கும் நீங்கள் யார்? எங்களை ஏன் தடுக்கிறீர்கள்? நீங்கள் யாருடைய தூதர்கள்?
மிகவும் அழகாக இருக்கிறீர்கள். பொன்னாடை, கிரீடம், குண்டலங்கள், தாமரை மாலை, வில், கத்தி, சங்கு, சக்கரம், கதை ஏந்திய நீங்கள் தேவர்களா? ஒளி மிகுந்தவர்களாக இருக்கிறீர்களே..
விஷ்ணுபார்ஷதர்கள் இடி இடியென்று சிரித்தனர்.
யமதூதர்களே! உண்மையில் நீங்கள் தர்மராஜனின் தூதுவர்களாயின், தர்மத்தின் லக்ஷணங்களைக் கூறுங்கள். தண்டனை எப்படித் தரப்படுகிறது? யாரைத் தண்டிக்கலாம்? பாவம் செய்யும் அனைவரையுமே தண்டிக்கலாமா? அல்லது சிலர் மட்டுமா?
யமதூதர்கள் கூறினர்.
வேதம் சொல்வதே தர்மம்.அதற்கு விலக்கானவை அதர்மம். வேதமே பகவானின் மூச்சு. ஜீவன் இவ்வுடலாலோ, மனத்தாலோ செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சாட்சிகள் உண்டு. சூரியன், பஞ்ச பூதங்களின் அபிமான தேவதைகள், தேவர்கள், சந்திரன், சந்தியாகால தேவதை, இரவு பகலின் அபிமான தேவதைகள், காலதேவதை, தர்மதேவதை ஆகியோர்.
இவர்களின் மூலம் ஒருவன் செய்யும் தீய செயல்களை அறிந்து, அவற்றின் அளவுக்கேற்ப தண்டனை நிர்ணயிக்கப்படுகிறது.
பாவம் செய்தவர் அனைவரும் தண்டனைக்குரியவர்கள்.
அனைவரிடமுமே பாவமும் புண்யமும் கலந்தே இருக்கும். செயலின்றி ஒருவரும் இருக்க இயலாது.
இப்பிறவியில் ஒருவன் செய்யும் பாவ புண்யச் செயல்களின் தன்மையை அறிந்து அவனது அடுத்த பிறவி வாழ்வை ஊகிக்கலாம்.
எங்கள் தலைவரான யமதர்மராஜன் அனைத்தும் அறிந்தவர். மனத்தாலேயே ஒரு ஜீவனின் செயல்பாடுகளை நன்கு அறிகிறார்.
கனவில் தன்னைக் காண்பவனுக்கு தன் உடல் நினைவிருப்பதில்லை. கனவில் காணும் தன் உடலையே உண்மை என்று நம்புகிறான். அதுபோலவே ஜீவன் முற்பிறவியின் உடல்கள் பற்றி அறியமாட்டான்.
காமம், கோபம், லோபம், மோகம், மதம், மாத்ஸர்யம் ஆகிய ஆறு பகைவர்களை வெற்றி கொள்ளாதவன் விரும்பாவிட்டாலும்கூட மனத்தின் வாசனைகளுக்கேற்ப பிறவி எடுத்து உழல்கிறான்.
அவனது மன இயல்புகள் அவனைப் பாவம் செய்யத் தூண்டுகின்றன.
சில சமயம் ஆணாகவும், சில சமயம் பெண்ணாகவும் பிறக்கிறான்.
உண்மையில் இந்த அஜாமிளன், பல நல்ல விஷயங்களை அறிந்தவன், நல்லொழுக்கமும் நற்குணங்களும் கொண்டிருந்தவன், வணக்கமுள்ளவன், புலனடக்கமுள்ளவன், வாய்மை நிரம்பியவன், வேதம் கற்றறிந்தவன், குரு, அக்னி, விருந்தாளி, மூத்தோர் ஆகியவர்க்குப் பணிவிடை செய்தவன், எப்போதும் நன்மையே நினைப்பவன், பொறாமையற்றவன்.
ஒரு சந்தர்ப்பத்தில் காமவயப்பட்டுக் கட்டுப்படுத்த இயலாமல் அனைத்தையும் விட்டான். தீயவழிச் சென்றான். தர்மங்களை அறிந்திருந்தும், பற்பல பாவங்களைத் துணிந்து செய்து, குடும்பத்தைக் காக்க முற்பட்டான்.
இதுவரை இவன் செய்த பாவங்களுக்கு ப்ராயசித்தம் செய்துகொள்ளவில்லை. எனவே, இவன் தண்டனைக்குரியவன். தண்டனைகளைப் பெற்றால்தான் சுத்தமாவான்.
என்றனர்.
என்றனர்.
விஷ்ணுதூதர்கள் இவற்றைக் கேட்டு பின்வருமாறு கூறினர்.
அடடா! எவ்வளவு அறநெறி மிகுந்திருப்பினும், எப்படியோ மறநெறி மனத்தைக் கலைத்துவிடுகிறதே! சான்றோர்கள் செய்வதைத்தானே பாமரமக்கள் பின்பற்றுவர்?
பாமரமக்கள் விலங்குகளைப்போல் ஒன்றுமறியாமல் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றுவரே.
ஆனால், இவன் எவ்வளவு பாவங்கள் செய்தால் என்ன? கோடி ஜென்ம பாவங்களுக்கும் ப்ராயசித்தம் செய்துவிட்டான்.
தன்னிலை மறந்திருப்பினும் இவன் செய்த அறம் இவனைக் கைவிடவில்லையே. நாராயணா என்ற நான்கெழுத்துக்களைக் கூறி அனைத்துப் பாவங்களுக்கும் பரிஹாரம் தேடிக்கொண்டான்.
திருடன், குடிப்பவன், நம்பியவர்க்கு துரோகம் செய்தவன், அந்தணனைக் கொன்றவன், அரசன், பெற்றோர், பசு ஆகியவரைக் கொலை செய்தவன், இன்னும் பல கொடூரமான பாவங்களைச் செய்தாலும் அனைத்தையும் விட உயர்ந்த ப்ராயசித்தம் பகவன் நாமமே. ஒருவன் பாவமே செய்வேன் என்று சங்கல்பம் செய்துகொண்டு ஜென்மா முழுதும் பாவங்கள் செய்தாலும், அவனால், ஒரே ஒரு பகவன் நாமத்தால் தீர்க்கக்கூடிய அளவு பாவங்களைச் செய்ய இயலாது.
பகவன் நாமம் சொல்பவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பகவத் சிந்தனை ஏற்பட்டு, பாவ வாசனைகள் அழிந்துவிடுகின்றான.
நாராயணா என்ற ஒரே ஒரு பகவன் நாமம் பகவானையும், அவனது கல்யாண குணங்களையும் வேதத்தையும் நினைவூட்ட வல்லது. நாமம் சொல்பவனால் தீச்செயல்களில் ஈடுபட இயலாமல் போகும்.
ப்ராயசித்தங்கள் பாவத்தைப் போக்கலாம். சித்த சுத்தி தராது.
நாராயண நாமமோ சித்த சுத்தி தருகிறது. அதனால் பாவ வாசனைகள் அழிந்துபோகின்றன. நாமம் சொல்பவனை இறைவன் பார்த்து விடுவதால், அவனால் அதற்குமேல் தீய செயல்களில் ஈடுபட இயலாது.
ஸர்வ பாவங்களுக்கும் ஒரே பரிஹாரம் நாராயண நாமமே.
இவனது பாவங்கள் அனைத்தும் இப்போது பொசுங்கிவிட்டன. இவனை அழைத்துச் செல்லவேண்டாம். விட்டுவிடுங்கள். இவன் தண்டனைக்குரியவன் அல்லன்
என்றனர்.
#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..
No comments:
Post a Comment