ஸூதர் கூறினார். இந்த ஸ்த்ர யாகத்தின் இடைவெளியில் நீங்கள் கேட்டவாறே பகவானின் திருவிளையாடல்கள், அவதாரங்கள், அவற்றின் பயன் அனைத்தையும் நான் அறிந்தவரை கூறிவிட்டேன்.
யார் ஒருவர் இடறி விழும்போதோ, துன்பத்தின்போதோ, தும்மல் வரும்போதோ, தன்னிலை மறந்த நிலையிலோ, ஹரி ஹரி என்று கூறுவாரோ அவர் அனைத்துப் பாவங்களினின்றும் அக்கணமே விடுபடுகிறார்.
பகவானின் திருநாமங்கள் இடம், பொருள், காலம் என்ற பேதங்கள் அற்றது. அவற்றை வாயாரப் பாடினாலோ கேட்டாலோ பகவான் இதயத்தில் குடியமர்ந்துவிடுகிறார். காரிருளைச் சூரியன் சிதறடிப்பது போல அவரது துன்பங்களைச் சிதறடிக்கிறார்.
பகவானின் திருநாமங்களை உச்சரிக்காத நாவிலிருந்து வரும் சொற்கள் எவ்வளவு பொருள் பொதிந்ததாயினும் அவை சாரமற்றவை.
ஆடம்பரங்கள் நிறைந்த அவற்றில் அழகில்லை. எனவே வீண் சொற்களாகின்றன. பகவத் குணத்தை உணர்த்தும் சொற்களே ஆத்ம அனுபவத்தையும், சாந்தியையும் தரக்கூடியவை.
அச்சொற்களே இனிமையானவை, மனத்தை மயக்கக்கூடியவை. ஒவ்வொரு முறை சொல்லும்போதும் கேட்கும்போதும் புதிய இனிய சுவையைத் தரக்கூடியவை. அவற்றைக் கேட்பதால் எல்லையற்ற கவலை எனும் வலை அறுபடும். நிலையான ஆனந்தம் கிடைக்கும்.
சொல்லழகும், கருத்தழகும், நடையழகும் இருப்பினும் உயிரற்ற சிலையால் யாது பயன்? ஜீவன் உள்ளது பகவன் நாமமே.
பகவத் குணங்களைச் சொல்லும் சொற்களில் எந்த அழகும் இல்லையென்றாலும் அவற்றைத் தான் சான்றோர் கேட்பர். ஏனெனில் அவை பாவங்களைச் சுட்டெரித்து நிம்மதி தருபவை.
பகவத் பக்தி இல்லாத ஞானமே ஆகிலும் அதில் அழகேது? எவ்வளவு உயர்ந்த கர்மா ஆகிலும் அது பகவானுக்கு அர்ப்பணம் செய்யப்படவில்லை எனில் அதன் பயன் மீண்டும் கர்மச்சுழலில் மாட்டிவைக்கும். அதை அடியார் ஏற்கமாட்டார்.
வர்ணாசிரமம், தர்மங்கள், அனுஷ்டானங்கள், ஒழுக்கம், தவம், நற்கல்வி, நற்குடிப்பிறப்பு அனைத்தும் புகழையும், பொருளையும் ஈட்டித் தரலாம். ஆனால், பகவன் நாமமோ, பக்தியோ இல்லாத எவ்வித செயலும் பயனைத் தராது. இறைநாமம் இறைவனின் திருவடிக் கமலங்களில் நீங்காத அன்பைப் பெருக்கும். அது ஒன்றே அத்தனை பேதங்களையும், இடர்ப்பாடுகளையும், பாவங்களையும் களைந்து மனத்தூய்மை தரும். பகவானைப் பற்றிய உண்மை அறிவையும் இறைநாமமே பெற்றுத்தரும்.
ஹே! பெரியோர்களே! நீங்கள் அனைவரும் பாக்யசாலிகள். தினமும் இடையறாமல் எங்கும் நீக்கமற நிறைந்த இறைவனை உள்ளத்தில் நிறுத்தி வழிபடுகிறீர்கள்.
ஸ்ரீ சுகர் பரீக்ஷித்திற்கு கங்கைக் கரையில் இந்த ஸ்ரீ மத் பாகவதக் கதைகளைக் கூறினார். அப்போது ரிஷிகளும், பெரியோருமாக 88000 பேர் அமர்ந்து கேட்டனர். நானும் அவர்களிடையே அங்கு அமர்ந்து கேட்டேன். இப்போது நீங்கள் அதை நினைவுபடுத்திக் கேட்டு எனக்குப் பெரிய உதவி செய்தீர்கள்.
பகவானின் அனைத்து லீலைகளையும் கேட்கவும், நினைக்கவும், பாடவும் பேறு பெற்றேன்.
யார் தினமும் மன ஒருமையுடன் ஒரு நொடியாவது பகவானின் பெருமைகளைக் கேட்கிறாரோ அல்லது பிறரைக் கேட்கச் செய்கிறாரோ அவர் தன் உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக்கிக்கொள்கிறார்.
ஏகாதசியிலும் துவாதசியிலும் இக்கதைகளைக் கேட்பவர் நீண்ட ஆயுளைப் பெறுகிறார்.
புலனடக்கத்துடன் உபவாசம் இருந்து படிப்பவன் முன் செய்த அத்தனை பாவங்களையும் தொலைக்கிறான். பாவ எண்ணங்களும் அவனை விட்டு விலகுகின்றன.
புஷ்கரம், மதுரா, துவாரகை முதலிய புண்ணியத் தலங்களில் இந்த பாகவதத்தைப் பாரயணம் செய்து கேட்பவருக்கு சம்சார பயம் அறவே விடுபடுகிறது.
இக்கதையைக் கேட்பதால் தேவ, பித்ரு, ரிஷி கடன்கள் தீர்ந்துபோகின்றன. சித்தர்கள், மனுக்கள், அரசர்கள் அனைவரும் மகிழ்கின்றனர்.
சதுர் வேதங்களையும் ஓதிய பலன் இந்தக் கதைகளைக் கேட்பதாலேயே கிடைத்து விடுகிறது.
நியமத்தோடு படிப்பவர் பரமபதத்தை அடைகிறார்.
எத்தனையோ புராணங்கள் இறைவனைப் பாடினாலும் இடையீடே இன்றி ஒவ்வொரு பதத்திலும் இறைவனின் புகழ் பாடப்படுவது ஸ்ரீ மத் பாகவதத்தில் தான். ஒவ்வொரு சொல்லும், பகவான் ஹரியின் ரூபமே.
ஸத் சித் ஆனந்த ஸ்வரூபரான அந்த பகவானை வணங்குகிறேன்.
எந்த பகவான், தன் ஸ்வரூபத்திலேயே ப்ரக்ருதி, புருஷன், மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள், ஆகிய ஒன்பது சக்திகளையும் ஒன்றிணைத்து தன் சங்கல்பத்தினாலேயே இந்த ப்ரபஞ்சத்தைப் படைத்து தானும் அந்தர்யாமியாக அதன் ஒவ்வொரு துளியிலும் வீற்றிருக்கிறாரோ, எவர் ஞானத்தின் ஆதாரமோ, எவருடைய பரமதம் அவரையே அனுபவத்தில் உணர்த்துகிறதோ, எவர் தேவாதி தேவரோ, எவர் ஆதி அந்தமற்றவரோ அந்த பகவானை வணங்குகிறேன்.
#மாஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே.