Sunday, September 30, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 110 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 54

அந்தணர்கள் தக்ஷனின் வேள்வியைத் தொடங்கவும், ஏற்கனவே பூதகணங்களால் வேள்வியில் ஏற்பட்ட தோஷங்களைப் போக்கவும், பகவான் விஷ்ணுவின் ப்ரீதிக்காக 'புரோடாசம்' என்ற ஹவிஸை மூன்று பாத்திரங்களில் தயார் செய்தனர். அதை அத்வர்யு என்ற ப்ரதான புரோஹிதர் கையொலேந்தி நிற்க, வேள்வி நாயகனான தக்ஷன் பகவான் விஷ்ணுவைத் தியானித்தான்.

அழைக்குமிடத்திற்கு ஓடிவரும் பெருமான் உடனே ஆவிர்பவித்தார்.

அவரது திருமேனி ஒளியில் அனைத்தும் மங்கிப்போயின. ப்ருஹத், ரந்திரம் என்ற இரு ஸாமவேதங்களையும் இறக்கைகளாகக் கொண்ட கருடன் மேல் ஏறிக் காட்சியளித்தார்.
ஸ்ரீ மத் பாகவத்தில் இரண்டு மூன்று அத்யாயங்களுக்கு ஒரு முறையேனும் பகவான் விஷ்ணுவின் ரூபவர்ணனை மிக விஸ்தாரமாகச் சொல்லப்படும்.
இவ்வாறு சொல்லிச் சொல்லி கதை கேட்பவரின் மனத்தில் காதுகளின் வழியாகவே பகவானின் ரூபத்தை ப்ரதிஷ்டை செய்து விடுகிறார் வியாஸ பகவான்.

நீலமேகத் திருமேனி, இடுப்பில் பீதாம்பரம், அதன்மேல் ரத்தினக் கற்கள் பதித்த தங்க ஒட்டியாணம், சூரிய ஒளி போல் கண்ணைப் பறிக்கும் கிரீடம், தாமரை மலரன்ன திருமுகம், கறுத்த அளகபாரம் (சுருண்ட கேசம்), காதுகளில் மகர குண்டலங்கள், பக்தர்களைக் காப்பதற்காகவே எட்டு கரங்களிலும் சங்கு, சக்கரம், தாமரை மலர், அம்பு, வில், கதை, வாள், கேடயம் முதலிய ஆயுதங்கள், கர்ணிகார மரம் போன்ற உறுதியான திருமேனி, மார்பில் ஸ்ரீ வத்ஸம் என்னும் திருமகள் வசிக்கும் மரு, கழுத்தில் வனமாலை, அழகான புன்சிரிப்பு, கருணை ததும்பும்‌ பார்வை இவற்றுடன் ப்ரபஞ்சமே மகிழும் வண்ணம் பகவான் தோன்றினார்.

ப்ரும்மா உள்ளிட்ட அத்தனை தேவர்களும் உடனே எழுந்து வணங்கினார்கள்.

பகவானின் புகழைச் சொல்லி மாளாது. எனினும் அனைத்து தேவர்களும் தங்களால் இயன்ற ஸ்துதிகளைச் செய்தனர்.

தக்ஷன் உடனே பூஜா பாத்திரங்களை எடுத்துக்கொண்டு பார்ஷதர்கள் சூழ பகவானின் திருவடியை அடைந்து துதித்தவாறே சரணடைந்தான்.

தக்ஷன், ரித்விக்குகள், ஸபையோர்கள், ஸ்ரீ ருத்ரன், ப்ருகு, ப்ரும்மா, இந்திரன், ரித்விக்குகளின் மனைவியர், ரிஷிகள், ஸித்தர்கள், தக்ஷனின் மனைவி, திக்பாலகர்கள், யோகிகள், ப்ரும்மா, அக்னி, தேவர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், ப்ராஹ்மணர்கள் அனைவரும் தனித்தனியாக பகவான் முன் சென்று அவரைத் துதி செய்து வணங்கினார்கள்.

அக்காட்சி, எப்படி இருந்ததெனில்,
ஒரு மஹாத்மா ஒரு க்ருஹத்திற்கோ, அல்லது ஒரு சபைக்கோ எழுந்தருளினால், அங்குள்ளவர் அனைவரும் பொதுவாக ஒரு முறை வணங்குவர். இருப்பினும் அதனால் மனத்ருப்தி கொள்ளாமல் தனித்தனியாக ஒருமுறை அவர் முன் சென்று வணங்குவதைப் போல் இருந்தது.

வேள்வி துவங்கியதும் அத்தனை தேவர்களுக்குமான ஹவிர் பாகம் வழங்கப்பட்டதைக் கண்டு மகிழ்வுற்ற பகவான் தானும் தனது ஹவியைப்பெற்றார்.

பின்னர் தக்ஷனை அழைத்துக் கூறலானார்.

தக்ஷனே! ஜகத்திற்கு ஆதிகாரணனான நானே ப்ரும்மாவாகவும், சிவனாகவும் உருக்கொண்டிருக்கிறேன். அனைத்து ஜீவன்களின் ஆன்மாவும் நானே. அவர்களின் அத்தனை செயலுக்கும் சாட்சியாக விளங்குகிறேன். ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களை ஏற்று மாயையை இயக்கி அந்தந்தச் செயல்களுக்கேற்ற உருவமும் பெயரும் கொண்டு விளங்குகிறேன்.

அறிவிலிகள் என்னையும், ப்ரும்மாவையும், சிவனையும் வெவ்வேறாகப் பார்க்கிறார்கள்.

எந்த மனிதனாவது அவனது தலை, கை, கால்கள் முதலியவற்றை வேறு ஒருவனுடையது என்று எண்ணுவானா? அதுபோலவே என் பக்தன் என்னிடமும், மற்ற ஜீவராசிகளிடமும் வேற்றுமை பாராட்டுவதில்லை.

எங்களுக்குள் வேற்றுமை காண்பவன் அமைதியைப் பெறுவதில்லை.
என்றார்.

மைத்ரேயர் கூறலானார்.

விதுரா..
இவ்வாறு கூறி அவனை ஆசீர்வாதம் செய்துவிட்டு பகவான் கிளம்பியதும், தக்ஷன் மற்ற தேவர்களுக்குரிய மரியாதைகளைச் செய்துவிட்டு வேள்வியை முடித்து அவப்ருதஸ்நானம் செய்தான்.

(அவப்ருதம் என்பது வேள்வியை முடித்துப் பின் செய்யவேண்டிய மங்கள ஸ்நானம்)

அனைத்து தேவர்களும் தக்ஷனை
உன்‌ மனம் என்றும் தர்மநெறியில் நிற்கட்டும்‌
என்று வாழ்த்திவிட்டு இருப்பிடம்‌ சென்றனர்.

இவ்வாறு தக்ஷன் மகளான ஸதீதேவி யோகத்தீயால் உயிர் நீத்த பின் ஹிமவானின் மனைவியான மேனா தேவியிடம் பார்வதி என்னும் பெயருடன் மகளாகப் பிறந்தாள். பரமேஸ்வரனையே புகலாகக் கொண்ட அவள், அவரையே கணவராக அடைந்தாள்.

இந்த சரித்திரத்தை ப்ருஹஸ்பதியின் சிஷ்யரும், பரம பாகவதருமான உத்தவரிடமிருந்து கேட்டறிந்தேன்.

விதுரா! இச்சரிதம் ஆயுளையும், புகழையும் வளர்க்கக்கூடியது. பாவமூட்டைகளை அழிப்பது. இதை பக்தியோடு தானும் கேட்டுப் பிறருக்கும் சொல்பவனது ஸம்சார துக்கம் நீங்கும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, September 28, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 109 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 53

தேவகணங்கள் புடைசூழ கைலாயம் சென்ற ப்ரும்மதேவர் பரமேஸ்வரனை வணங்கிவிட்டுக் கூறலானார்.

சங்கரா! தாங்கள் பூரண ப்ரும்மம் என்பதை அறிவேன். வேத‌மார்கத்தைக்‌ காப்பாற்ற எண்ணி தக்ஷன்‌ மூலம்‌ இந்த வேள்வியை உருவாக்கியதே தாங்கள்தானே. விரதங்கள், அனுஷ்டானங்கள், வர்ணாஸ்ரம ‌தர்மம் ஆகியவற்றைத் தோற்றுவித்தவரும் தாங்களே.

புண்ய கர்மங்கள் செய்பவர்க்கு ஸ்வர்கத்தையும்‌ முக்தியையும் அருள்கிறீர்கள்.

தீயசெயல் செய்பவர்க்குக் கொடிய நரகத்தை அளிக்கிறீர்கள்.

சாதாரணமான பாமரனைக் கோபம்‌ அடிமைப்படுத்துதல் இயல்பு. ஆனால், தங்கள் திருவடியில் மனத்தை லயிக்கச் செய்பவர்கள்,‌ சகல ஜீவராசிகளிடத்தும் தங்களையே காண்பவர்களைக் கோபம் எவ்வாறு அடிமைப்படுத்த முடியும்?

எங்கும்‌ எதிலும்‌ வேற்றுமை பாராட்டி, கண்மூடித்தனமாக கர்ம மார்கத்தில் உழல்பவர்கள், தீய எண்ணம் கொண்டவர்கள். பொறாமைத்தீயில் வெந்துபோகிறவர்கள்.

இவர்களை இவர்களது நடத்தையே கொன்றுபோடும். அவ்வாறிருக்க பெரியோர்களான தாங்கள் அவர்களைக்‌ கொல்லத் தேவையில்லையே.

பகவானான பத்மநாபனின் மாயை வெல்லமுடியாதது. அநேகமாக எல்லோருமே அதன்‌ அடிமைகள்தாம். அவர்கள் மனம் பேதலித்து வேற்றுமை பாராட்டும்‌ இடத்தில் இது விதியின் வலிமையே அன்றி இவனாகச் செய்யவில்லை என்று கருணை கொள்வார்களேயன்றித் தம்‌வலிமையைக் காட்டுவதில்லை.

வேள்வியில் தங்களுக்கு ஹவிர்பாகம்‌ உண்டு என்பது நியதி. அறிவிலிகளான இந்த புரோஹிதர்கள் தங்களுக்கு ஹவிர்பாகம் கொடாமல் வேள்வியை நடத்தியது மாபெரும் தவறுதான். தாங்கள் இவ்வேள்வியை அழித்ததும் நியாயமே. ஆனால், பாதியில் நின்றுபோன யாகத்தைப் பூர்த்தி செய்யக் கருணை செய்யுங்கள்.

வேள்வி செய்யும் தக்ஷன் உயிருடன் எழட்டும். பகனுக்கு கண்கள்‌கிடைக்கட்டும். ப்ருகு முனிவரும் பூஷாவும் இழந்தைவைகளைப் பெறட்டும். ஆயுதங்கள் கற்கள் இவைகளால் உடல் நொறுங்கிய தேவர்கள் தங்கள் கருணையால் விரைவில் குணமடையட்டும்.

வேள்வியில் எஞ்சிய அனைத்துமே உமது பாகமாகட்டும். தாங்கள் பாகத்தை ஏற்றாலேயே வேள்வி பூர்த்தி அடையட்டும்
என்று வேண்டினார்.

பரமேஸ்வரன் சிரித்தவாறே கேளுங்கள் என்று சொல்லிக் கூறலானார்.

ப்ரும்மதேவரே! பகவானின் மாயையில் மயங்கிய புத்தியற்ற தக்ஷன் போன்றவர்களின் செயல்களைப் பற்றி நான் சிந்திப்பதோ பேசுவதோ இல்லை.

ஆனால், தவறு செய்பவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டாமா? அதனால்தான் இச்சிறிய தண்டனை.

தக்ஷன் தலை எரியுண்டதால் அவன் ஆட்டுத்தலையைப்‌ பெறட்டும். மித்ரன் என்ற தேவனின் கண்களால் பகன் யாகத்தைப் பார்க்கட்டும். மாவுப் பண்டங்களைச் சாப்பிடும் பூஷா வேள்வி செய்யும் எஜமானனது பற்களால் மென்று சாப்பிடட்டும். வேள்வியில் எஞ்சியதை எனக்களித்த தேவர்களது உடலுறுப்புகள் முன்போல் ஆகட்டும்.

கையிழந்த அத்வர்யு முதலானவர்கள் அஸ்வினி தேவர்கள் மற்றும்‌ பூஷா ஆகியோரின் கரங்கள் வாயிலாகத் தன்‌காரியங்களைச் செய்துகொள்ளட்டும். ப்ருகுமுனிவர் ஆட்டுக்கடாவின் மீசையைப்‌ பெறட்டும்.
என்றார்.

ஏதோ இந்த அளவிற்கு இரங்கி‌செய்தாரே என்று அத்தனை தேவர்களும் உடனேயே நன்று நன்று‌ என்று ஆர்ப்பரித்தனர்.

பரமசிவனிடம் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் வேள்விச்சாலை க்கு வந்தனர் தேவர்கள்.

அங்கு ஸ்வனீயம்‌ என்ற யக்ஞப்பசுவான ஆட்டின் தலையை தக்ஷனின் உடலில் பொருத்தியதும் அவன் உயிர் பெற்றெழுந்தான். முன்பு பகைமையினால் மனம் கலங்கியிருந்த தக்ஷன் இப்போது மனத்தெளிவடைந்து சிவனின் கருணையை நினைத்துக் கண் கலங்கினான்.
பேச நா எழவில்லை. பொங்கும் இதயத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு மனதார சிவனைத் துதிக்கலானான்.

இறைவா! தங்களை நான் அவமதித்தபோதிலும் அதைப் பொருட்படுத்தாமல் அனுக்ரஹமே செய்தீர்கள்.

ஒருவன் ஆசார அனுஷ்டானமின்றிப் பெயரளவில் அந்தணனாக இருந்தாலும்கூட நீங்களும் மஹாவிஷ்ணுவும் அவனைப் புறக்கணிப்பதில்லை. அப்படியிருக்க வேள்வி செய்பவர்களை எப்படிப் புறக்கணிப்பீர்கள்?

தாங்களே ப்ரும்மாவாக இருந்து அனைத்து வேதங்களையும், ஜீவராசிகளையும் படைத்தீர்கள். மாடு மேய்ப்பவன் கையில் கோல் கொண்டு பசுக்களை ஒருமுகப்படுத்திக் காப்பதுபோல் தாங்கள் சாஸ்திரங்களைக் கொண்டு அனவரையும் சகல ஆபத்துக்களிலிருந்தும் காக்கிறீர்கள்.

தங்கள் பெருமையறியாமல் கீழான சொல்லம்புகளால் உம்மைத் தாக்கிவிட்டேன். நான் தங்களுடைய கருணைக்கு எவ்விதக் கைம்மாறும் செய்ய இயலாதாவன்.

என் மேல் தாங்கள் மகிழ்ச்சி கொள்ளவேண்டும்
என்று தக்ஷன்
மிகவிரைவில் மனம் மகிழும் இயல்புடைய பரமேஸ்வரனைத் துதித்தான்.

பின்னர்
ப்ரும்மாவின் அனுமதிபெற்று ரித்விக்குகள், புரோஹிதர்கள் ஆகியவர்களின் உதவியுடன்‌ மீண்டும் யாகத்தைத் துவங்கினான்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Thursday, September 27, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 108 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 52

மைத்ரேயர் தொடர்ந்து கூறினார்.

ருத்ரகணங்களின் செய்கையால் பயந்துபோன தேவர்களும் புரோஹிதர்களும் ஓடிச்சென்று ப்ரும்மாவிடம்‌ முறையிட்டனர்.

இந்நிகழ்ச்சியை முன்பே எதிர்பார்த்திருந்த ப்ரும்மனும் ஸ்ரீமன்‌நாராயணனும் தக்ஷனின் வேள்விக்குச் செல்லவில்லை.

தேவர்கள் கூறியதைக் கேட்ட ப்ரும்மா,
தேவர்களே! வலிமை மிக்க ஒருவன் தனக்கு எதிரானவனுக்கு தீமை எண்ணினால், அவன் எண்ணும் தீமைகள் அனைத்தும் அவனுக்கே வந்துவிடும்.

முறைப்படி வேள்விகளில் ஹவிர்பாகம் கொடாமல் பரமேஸ்வரனுக்கு பெருந்தவறு இழைத்துவிட்டீர்கள். அவர் எளிதில் அருள் புரியும் வள்ளல். அவர் தாளிணை பற்றி மன்னிப்புக் கோருங்கள்.

நீங்கள் துவங்கிய வேள்வி முற்றுப்பெற வேண்டுமானால், உடனே சென்று பாவ மன்னிப்பு வேண்டுங்கள். ஏற்கனவே தக்ஷனின் சொல்லம்புகளால் மிகவும்‌ புண்பட்டிருக்கிறார். இப்போது அன்பு மனைவியையும்‌ இழந்துவிட்டார். அவருக்குக் கோபம் வருமாகில் அனைத்து உலகங்களும்‌ அழியும்.

அவரது பராக்ரமத்தையும் உண்மை நிலையையும் எவரும் அறியமாட்டார்.

அவரைச் சமாதானப் படுத்துவதும் கடினம். அவர் திருவடிகளில் தஞ்சம் புகுவதே ஒரே வழி
என்றார்.

பின்னர் அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு ப்ரும்மா தானும்‌ கைலாயம் கிளம்பினார்.
ஏற்கனவே வைகுண்டத்தை மிக அழகாக நேரில் காண்பிப்பதாக வர்ணித்திருக்கிறார் வியாஸ பகவான்.
இப்போது கைலாயத்தை அழகுற வர்ணிக்கிறார்.

கைலாய மலையில் மூலிகைகள், தவம், மந்திரம், யோகம்‌ இவற்றால் சித்தி பெற்றவர்களும்‌, மற்றும் பிறவியிலேயே சித்தி பெற்ற தேவர்களும் யோகிகளும் முனிவர்களும் நித்ய வாசம்‌ செய்கின்றனர்.

கின்னரர்கள், கந்தர்வர்கள், அப்ஸரப் பெண்டிர்கள்‌ நிறைந்தது அம்மாமலை.
பல வண்ணமயமான தாதுக்கள் நிறைந்த உயர்ந்த சிகரங்களை உடையது.

மரங்கள், செடிகொடிகள், புதர்கள்‌ மண்டியது. காட்டு விலங்குகள்‌ கூட்டம்‌ கூட்டமாகச் சஞ்சரிப்பது.

பளிங்கு போன்ற நீரோடைகளும் அருவிகளும் கொண்டது. குகைகளும் தாழ்வரைகளும் நிரம்பியது. சித்தர்கள் மற்றும் அவர்களது மனைவிமார்களின் விளையாட்டுத் தோட்டமாக விளங்குவது.

மயில்கள் அகவல் ஒலிகள், பஞ்சம ஸ்வரத்தில் குயில்களின் குரல்கள் , வண்டுகளின் ரீங்காரம், பல்வேறு பறவைகளின் கலகலவென்ற ஓசை, நதிகளின் சலசலப்பு போன்ற பல்வேறு நாதங்கள்‌ கேட்டுக்கொண்டே‌ இருக்கும்.

ஏராளமான கற்பகத்தருக்களைக் கொண்டது. அங்குமிங்கும் நடந்து செல்லும் யானைகளைக் கண்டால் மலைதான் அசைகிறதோ என்று தோன்றும்.

மந்தாரம், பாரிஜாதம், ஸரவம், தமாலம், தேக்கு, பனை, மருதம், மா, கதம்பம், வேம்பு, நாகம், புன்னாகம், சம்பகம், பாடலம், அசோகம், மகிழம், குந்தம், மருதோன்றி முதலிய மரங்கள், நூறு‌ இதழ்கள் கொண்ட பொற்றாமரைகள், ஏலக்காய், மாலதிக்கொடிகள், குடை மல்லிகை, மல்லிகை, வ்ருக்ஷி ஆகிய பூக்களும்‌ நிரம்பி வழிகின்றன.

இன்னும் கைலாயத்தில் காணப்படும் ஏராளமான மரங்கள், பூக்கள், விலங்குகளின் வகைகள் அனைத்தும் விவரமாகச் சொல்லப்படுகின்றன.
அங்கு அவர்கள் அளகாபுரியைக் கண்டனர். ஸௌகந்திகம் என்னும் தாமரைப்பூக்கள் நிறைந்த ஸௌகந்திக வனத்தைக் கண்டனர்.

அளகாபுரிக்கு வெளியில் பகவானின் தாமரைத் தாள்கள் பட்டு, நந்தா, அளகநந்தா என்று பவித்ரமான புண்ய நதிகள்‌ உள்ளன.

பொன், வெள்ளி, நவமணிகளால் இழைத்துச் செய்யப்பட்ட விமானங்களில் யக்ஷர்களது மனைவிகள்‌ உலா வருகின்றனர். அதனால் அளகாபுரி மின்னல்களால் சூழப்பட்ட ஆகாயம்போல் காட்சியளித்தது. நீலத்தாமரைகள்‌ மிகுந்த தடாகங்கள் காணப்பட்டன.

அனைத்தும் கண்டுகொண்டே சென்ற தேவர்கள் அங்கு ஒரு பெரிய கல்லால மரத்தைக் கண்டனர்.

அம்மரம்‌நூறு யோஜனை உயரமுடையது. எழுபத்தைந்து யோஜனை தூரத்திற்கு அதன் கிளைகள் படர்ந்திருந்தன. அங்கு எப்போதும்‌ நிழல்‌ நிரம்பியிருந்தது. பறவைகளின் கூடுகளே இல்லை.

அம்மரத்தடியில் வசித்தால்‌ மனம் ஒன்றுபடும். முக்தியின்பம்‌ பெற விரும்புவோர் வந்து கூடுமிடம்‌ அது.

அவ்வாலமரத்தடியில்
சினம் தவிர்த்த யமனோ?
என்னும்படி வீற்றிருக்கும் சிவபெருமானைக் கண்டனர் தேவர்கள்.
அமைதியே உருவாக ஸனகர், முதலியவர்களும், குபேரனும்‌ சேவை செய்ய பரமேஸ்வரன் அமர்ந்திருந்தார்.
உலகங்கள் அனைத்திற்கும் தலைவர், ஏழைப் பங்காளன், நண்பர், அன்புள்ளத்தால் அனைவர்க்கும் அருள் செய்பவர். உலக நன்மைக்காக உபாசனை, தவம், தியானம் ஆகியவற்றைச் செய்பவர்.

மாலைவேளை மேகம் போல் செந்நிறத் திருமேனி கொண்டவர். பொன்னார் மேனி, விபூதி, தண்டம், சடைமுடி, மான்தோல், சந்திரகலை ஆகியவற்றோடு விளங்கினார்.

தர்பையினாலான ஆசனத்தில் அமர்ந்த முனிவர்கள் நாற்புறமும் சூழ, மத்தியில் நாரதருக்கு ப்ரும்ம தத்வத்தை உபதேசம்‌ செய்து கொண்டிருந்தார்.

தனது இடது பாதத்தை வலது தொடையில் வைத்து, இடது முழங்காலில் திருக்கரத்தை வைத்து ஊன்றி, வலது முன்னங்கையில் ருத்ராக்ஷமாலை ஏந்தி ஞான முத்திரை காண்பித்துக்கொண்டிருந்தார்.

அவரை தேவகணங்கள் திருவடிகளில் விழுந்து வணங்கினர். ப்ரும்மாவைக் கண்ட பரமேஸ்வரன் எழுந்திருந்து இரு கரம்‌கூப்பி அவரை வணங்கினார்.

அக்காட்சி வாமன அவதாரம் எடுத்தபோது லோகபூஜ்யரான மஹாவிஷ்ணு கச்யப முனிவரை வணங்கியது போலிருந்தது.

உடனே மற்ற தேவர்களும், முனிவர்களும் ப்ரும்மாவை வணங்கினர்.

ப்ரும்மதேவர் பரமேஸ்வரனிடம்‌ பேசலானார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Wednesday, September 26, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 107 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 51

ஸதீதேவி தன் ப்ராணனை விடுவதைக் கண்ட சிவகணங்கள் தக்ஷனைக் கொல்ல ஆயுதங்களைக் கையிலேந்திக்கொண்டு வேகமாக ஓடிவந்தனர். அவர்களது வேகத்தைக் கண்டு, ப்ருகு ரிஷி வேள்வியைக் கெடுப்பவர்களைக் கொல்லும் பொருட்டு அதற்குரிய மந்திரங்களைக்கூறி அக்னியில் ஹோமம் செய்தார். அப்போது ருபுக்கள் என்ற வலிமை மிக்க தேவகணங்கள் ஆயிரக்கணக்கில் எழுந்தனர். இவர்கள் தங்கள் தவலிமையால்‌ சந்திரலோகம் சென்று ஸோமபானம் அருந்தியவர்கள்.

தேஜஸ் மிகுந்த அவர்கள் கைகளில் கொள்ளிக்கட்டைகளோடு எதிர்ப்பதைக் கண்டு அனைவரும் நாற்புறமும் சிதறிஓடினர்.

தக்ஷன் அவமதித்ததால் ஸதிதேவி தன் இன்னுயிரை நீத்ததையும், தன் கணங்கள் அனைவரும் ருபுக்களால் விரட்டப்பட்டதையும் நாரதர் மூலம் அறிந்த சிவபெருமான் மிகுந்த கோபம் கொண்டார்.
மிகுந்த கோபத்துடன் உதடுகளைக் கடித்துக்கொண்டு மின்னல் மற்றும் அக்னி ஜ்வாலைபோல் ஒளிரும் தன்‌ ஜடாமுடியிலிருந்து ஒரு சடையைப் பிடுங்கி பயங்கரமாக அட்டஹாஸம்‌ செய்து செய்துகொண்டு, அதைத் தரையில் ஓங்கியடித்தார்.

(சிரிப்பது ஹாஸம்.
புன்முறுவல் செய்வது மந்தஹாஸம்.
ஹாஹா என்று சத்தம்போட்டு வாயை நன்றாகத் திறந்து சிரிப்பது அட்டஹாஸம்)
உடனே அதிலிருந்து மேகம்போல் கருத்த திருமேனி, அக்னியாய் ஒளிரும் மூன்று கண்கள், பயங்கரமான பற்கள், மண்டையோட்டுமாலை, பலவிதமான ஆயுதங்கள் ஆகியவற்றுடன் வீரபத்திரன் தோன்றினார்.

அவர் பரமேஸ்வரனை இரு கரம்‌கூப்பி வணங்கி,
நான் என்ன செய்யவேண்டும்? உத்தரவிடுங்கள்
என்றார்.

பரமேஸ்வரன் அவரைப் பார்த்து
ஹே! ருத்ரனே! நீ எனது அம்சமே. என் கணங்களுக்குத் தலைமை தாங்கிச் சென்று தக்ஷனையும் அவனது வேள்வியையும் அழித்துவிட்டு வா
என்றார்.

விதுரா!
வீரபத்ரன் பரமேஸ்வரனை வலம் வந்து வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

மிகவும் ஆர்ப்பரிக்கும் ருத்ரகணங்கள் சூழ, முத்தலை கொண்ட சூலத்தைக் கையிலேந்தி, காலில் வீரக்கழல்மணிகள் ஒலிக்க பயங்கரமாக கர்ஜித்துக்கொண்டு வேள்விச்சாலையை நோக்கி ஓடினார் வீரபத்திரன்.

அப்போது வேள்விச்சாலையில் இருந்த தக்ஷனும் அவனைச் சார்ந்தவர்களும் வடதிசை யிலிருந்து கிளம்பிய புழுதி வெள்ளத்தைப் பார்த்து
இதென்ன பேரிருள்? எங்கிருந்து இவ்வளவு புழுதி கிளம்பியது? என்று பேசிக்கொண்டனர்.

புயற்காற்றில்லை. தீயோரைத் தண்டிக்கும் ப்ராசீனபர்ஹிஸ் அரசனாக இருக்கிறான். எனவே திருடர் பயமும்‌ இல்லை.

(நல்ல அரசன் இருந்தால் திருடர் பயம் இருக்காது.)

பசுக்கள் மேய்ச்சல் முடிந்து வரும் வேளையும் இல்லை. ப்ரளயம்தான் வரப்போகிறதோ என்று விதம்விதமாக கற்பனை செய்தனர்.

தக்ஷனின் மனைவியும், மற்ற பெண்களும் தக்ஷன் செய்த பாவத்தின் விளைவால் ஏதோ அசம்பாவிதம் நேரப்போகிறது என்று பயந்தனர்.

வீரபத்திரன் காலரூபனாக அழிக்கக் கிளம்பியதும் அவரது கோபக்கனலால் அனைவர் மனத்திலும் பயம்‌ உண்டாகியது. தக்ஷனுக்குப் பல துர்நிமித்தங்கள் தோன்றின.

அதற்குள்ளாக அங்கு ஓடிவந்த ருத்ர கணங்கள் யாகசாலையைச் சூழ்ந்துகொண்டனர்.

சிலர் குள்ளர்கள். சிலர் மஞ்சள் நிறத்தவர். சாம்பல்‌ நிறத்தவர் சிலர். சிலர் முதலைபோல் வயிறும் வாயும்‌ படைத்தவர்கள்.

சிலர் கிழக்கு மேற்காகப் போடப்பட்டிருந்த தூலங்களை உடைத்தனர். பத்னி சாலைகளை அழித்தனர். யாகசாலையின் முன்புறமுள்ள சபா மண்டபம், ஆக்னீத்ரசாலை, யஜமானனின் அறை, போஜன சாலை, சமையற்கூடம் அனைத்தையும் த்வம்சம் செய்தனர்.

வேள்விக்குண்டங்கள், வேள்விக்கான பாத்திரங்கள் அனைத்தும் உடைக்கப்பட்டன. வேள்வித்தீயில் சிறுநீர் கழித்து அணைத்தனர்.

அங்குள்ள முனிவர்களையும் பெண்களையும்‌ பயமுறுத்தினர்.

மணிமான் ப்ருகுமஹரிஷியைப் பிடித்துக் கட்டினார். வீரபத்ரன் தக்ஷனையும், சண்டீசர் பூஷாவையும், நந்திகேஸ்வரர் பகனையும்‌ பிடித்துக்கொண்டார்கள்.

மற்ற கணங்கள் கற்களால் அனைவரையும் அடிக்க அனைவரும்‌ சிதறி ஓடினர்.

முன்பொருசமயம் ப்ரஜாபதிகள் நிறைந்த சபையில் மீசையை முறுக்கிக்கொண்டு சிவனைக் கேலி செய்தார் ப்ருகுமுனி. வீரபத்ரன் அவரது மீசையைப் பிய்த்தெறிந்தார்.

நடுச்சபையில் தக்ஷன் சிவனை அவமதித்தபோது அவனைக் கண்களால் ஊக்குவித்த பகனின் கண்களைப் பிடுங்கினார்.

தக்ஷன் பரமேஸ்வரனை ஏசும்போது பற்கள் வெளியே தெரியும்படி சிரித்த பூஷாவின் பற்களை அடித்து நொறுக்கினார்.

அனிருத்தன் திருமணத்தில் பலராமர் பகடையாடும்போது கலிங்கமன்னன் சிரித்தான். அப்போது கோபம்கொண்ட பலராமன் அவனது பற்களை உடைத்தது போல்‌ இருந்தது இது.

பின்னர் வீரபத்ரன் தக்ஷனைக்‌கீழே தள்ளி அவன் தலையைக் கொய்ய முயற்சி செய்தார். எவ்வளவு முயற்சி செய்தபோதும் தலை வெட்டுப்படவில்லை.
சற்றுச் சிந்தித்த வீரபத்திரன் வேள்விச் சாலையில் வேள்விக்கான பசுவை பலியிடும்‌ முறையால் தக்ஷனின் தலையைக் கொய்தார்.

இச்செயலைக்கண்டு பூதகணங்கள் அனைவரும் கொண்டாடினர். தக்ஷனைச் சேர்ந்தவர்கள் ஹாஹா என்று கதறினர்.

தக்ஷனின் தலையை வேள்வித்தீயில் போட்டு வேள்விச்சாலை முழுவதையும் தீக்கிரையாக்கிவிட்டு வீரபத்ரன் கயிலாயம்‌ சென்றார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Tuesday, September 25, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 106 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 50

பகவான் சங்கரர் ஸதீதேவியை தக்ஷன் நடத்தும் யாகத்திற்குப் போகவேண்டாம் என்று சொல்லி அதற்குப் பல்வேறு காரணங்களையும் சொல்லி நிறுத்திக்கொண்டார்.

ஆனால், ஸதீதேவியின்‌ மனம் ஊசலாடியது. வெளியில் போவதும் அவர் என்ன நினைப்பாரோ என்று உள்ளே வருவதுமாக அலைந்தாள்.

தன் உறவினரைப் பார்க்கப் போகவேண்டாம் என்ற பரமேஸ்வரன் மீது கோபம் கொண்டாள். அவள் உடல் நடுங்கியது. மனம் கலங்கிய தேவி, அன்பினால் தன் திருமேனியில் பாதி அளித்த சிவனை விட்டுப் பிரிந்து பிறந்தகம் சென்றாள்.

அவள் போவதைக் கண்ட மணிமான் முதலிய பார்ஷதர்கள் சிவனின் அனுமதியுடன் நந்திதேவரை அழைத்துக்கொண்டு அவள் பின்னால் சென்றனர். அவளை நந்தியின் மீது அமரச் செய்து, உரிய அரச மரியாதையுடன் வாத்யங்களை முழக்கிக்கொண்டு சென்றனர்.

இவ்வாறு ஸதீதேவி பணியாட்கள் புடைசூழ யாகசாலையில் நுழைந்தாள்.

அங்கு நாற்புறமும் வேதம் ஒலித்தது. யாகத்திற்கான மிக விமரிசையான ஏற்பாடுகளைக் கண்டாள்.

தன் வீட்டை நாடி வந்த பெண்ணை வா என்று கூட தக்ஷன் அழைக்கவில்லை. மாறாக அவமதித்தான். அவனிடம்‌கொண்ட அச்சத்தால் வேதியர்களும் வாளாவிருந்தனர்.

அவளது உடன் பிறந்தோரும் அன்னையும்‌ மகிழ்ந்து கட்டிக்கொண்டு உச்சிமோந்து வரவேற்றனர்.

தந்தையால் அவமதிக்கப்பட்ட ஸதீதேவி எதையும் ஏற்கவில்லை.

வேள்வியைக்‌ கவனித்தபோது பரமேஸ்வரனுக்கு ஹவிர்பாகம்‌ அளிக்காததைக் கண்டு துணுக்குற்றாள். மூவுலகையும்‌ எரிப்பாள் போலச் சினம்‌ கொண்டாள்.

தேவியின் கோபத்தைக் கண்டு தக்ஷனைக் கொல்ல எழுந்த தன் பூதகணங்களைக் கையமர்த்திவிட்டு கோபத்துடன் கரகரத்த குரலில் தக்ஷனைப் பார்த்து உரக்கப் பேசினாள்.

தந்தையே! அகில சராசரங்களிலும் அன்பு கொண்டவர் சங்கரர். அவருக்கு வேண்டியவர் வேண்டாதவர் யாருமில்லை.

மிகவும் உயர்ந்தவர். அவரிடம்‌ உம்மைத் தவிர வேறு யார் பகைமை கொள்வார்?

தங்களைப் போன்றோர் மற்றவரின் நற்குணங்களையும்‌ குற்றமாகவே காண்பர்.

பிணமாகப்போகும் இவ்வுடலை ஆத்மா என்று கொண்டாடுபவர் சான்றோரைப் பழிப்பதில் வியப்பேது?

சான்றோர் பொறுமைக்கடல் ஆவர். ஆனால் அவரை அவமதிப்பதைப் பொறுக்காத சான்றோரின் திருவடித்துகள் அவமதிப்பவரின் புகழை அழித்துவிடும்.

இரண்டே எழுத்துக்கள் கொண்ட 'சிவ' என்னும் நாமம் மிக உயர்ந்தது. அதை அறிந்தோ அறியாமலோ சொல்பவர்க்கு பாவங்கள் அனைத்தும் விலகி மங்களம்‌ உண்டாகும்.

அனைத்து ஜீவராசிகளுக்கும் உறவான அவரிடம்‌ பகைமை கொண்டீர்.

தர்மரக்ஷகனான பகவானை அறிவிலி என்று எவராவது நிந்திப்பாரேயாகில் அவரைத் தடுத்தி நிறுத்தவேண்டும். அதற்குத் திறனில்லையெனில் காதுகளைப் பொத்திக்கொண்டு அவ்விடத்தை விட்டுச் சென்றுவிடவேண்டும்.

நீலகண்டனை அவமதிக்கும் உங்களால் தோற்றுவிக்கப்பட்ட இவ்வுடலை இனி ஒரு கணமும் தரிக்கமாட்டேன். உடலுக்கு ஒவ்வாத உணவை உட்கொண்டு விட்டால் வாந்தி எடுத்தாவது அதை வெளியேற்றவேண்டும். இல்லையெனில்‌ தீமை நேரிடும்.

ஆன்மாவை உணர்ந்த ஞானிகளது மனம் வேதத்தில் கூறிய கர்மகாண்டத்தைப் பின்பற்றாது. அவர்களது நடவடிக்கைகளை எவரும் புரிந்துகொள்ள இயலாது.

கர்ம காண்டம் அனைத்துமே ப்ரவிருத்தி தர்மம். உலக வாழ்வை நடத்த உதவுவது. வாழ்வை வெறுப்பவர் பின்பற்றுவதோ நிவ்ருத்தி தர்மம். இரண்டுமே வேதத்தில் கூறப்பட்டவைதாம்.

சங்கரரோ ப்ரும்மஸ்வரூபம். அவர் இவையனைத்தையும்‌ கடந்து நிற்பவர்.
பரமேஸ்வரன் என்னை தாக்ஷாயணீ என்றழைப்பார். சிவத்வேஷியான உமது பெயரால் இனி என்னை அவர் அழைக்க நேரிட்டால் நான் தலைகுனிந்து வருந்த நேரிடும். உம்மால் ஏற்பட்ட இவ்வுடலை ஒழிக்கிறேன்
என்று சொல்லி
ஸதீதேவி மஞ்சள் ஆடை அணிந்து மௌனம் மேற்கொண்டு இருகண்களையும் மூடி வடக்கு நோக்கி யோகாசனத்தில் அமர்ந்தாள்.
யோகசக்தியானால் ப்ராணனை மேலே எழுப்பி இதய சக்கரத்தில் நிறுத்தினாள். பின்னர் புருவ மத்திக்குக் கொண்டுவந்தாள். அங்கிருந்து அக்னியை மூளச்செய்து உடலெங்கும் நிரப்பினாள். அவளது திருமேனி முழுதும் யோகத்தீ சூழ்ந்தது. பரமேஸ்வரனையே மனத்தில் தியானித்து மிகுந்த தூய்மை மிக்கவளாகி உடலை நீத்தாள்.

அங்கிருந்த தேவரும் ரிஷிகளும் 'ஹாஹா' என்று கூக்குரலிட்டனர்.
பின்னர் அனைவரும் தக்ஷனைத் தூற்றினர்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Monday, September 24, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 105 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 49

தக்ஷனின் கதையைத் தொடர்ந்து சொன்னார் மைத்ரேயர்.

தன் மாப்பிள்ளையான சிவன் ப்ரஜாபதியான தனக்கு மரியாதை அளிக்கவில்லை என்று அஹங்காரத்துடன் அவரைக் கண்டபடி ஏசத் துவங்கினான் தக்ஷன். அனைத்தையும் நிந்தாஸ்துதியாக ஏற்று பரமேஸ்வரன் அமைதி காத்தார்.

ஆனால் சபையிலிருந்த மற்றவர்கள் மிகுந்த அச்சத்துடன் தக்ஷனைத் தடுக்க முயற்சி செய்தும் அவன் கேட்காமல் யாகத்தில் ஹவிர்பாகம் கிடையாது என்ற சிவனுக்கு சாபமும் அளித்தான்.

தன் தலைவரை நிந்தனை செய்ததைப் பொறுக்க இயலாமல் நந்திதேவர் தக்ஷனுக்கு ஆட்டுத்தலை கிடைக்கட்டும் என்று சாபமளித்தார். அவர் இன்னொரு கொடூரமான சாபத்தை அந்தணர்க்கும் அளித்தார்.

அறிவிலியான தக்ஷன் கர்மங்களை மெய்யென்று எண்ணுகிறான். இவனும், இவனைச் சேர்ந்தவர்களும்‌ ஸம்சார சாகரத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கட்டும். இவன் செய்த நிந்தனையை அனுமதித்த அந்தணர்களுக்கு பிழைப்பிற்காக வேத அத்யயனம்‌செய்யும் நிலைமை வரட்டும். பிழைப்பிற்காகவே விரதங்களும், தவமும் மேற்கொண்டு பொறி இன்பத்தில் உழலட்டும் என்ற கொடூரமான சாபத்தை அளித்தார் நந்திதேவர்.

அதைக் கண்டு பொறுக்காத ப்ருகு முனிவர் சிவனடியார்கள்‌ ஆசாரம் விடுத்து பாஷண்டிகளாக அலையட்டும்‌ என்று சாபம் விடுத்தார்.

அவரது சாபத்தைக் கண்டு வருந்திய சிவன் தன் கணங்களுடன் அமைதியாக வெளியேறினார்.

விதுரா! ப்ரஜாபதிகள் அனைவரும் யாகத்தை முடித்துக்கொண்டு கிளம்பினார்கள்.

மாமனாருக்கும் மாப்பிள்ளைக்குமான இப்பகைமை வெகுகாலம் நீடித்தது.

ஒரு சமயம் ப்ரும்மதேவர் ப்ரஜாபதிகள் அனைவர்க்கும் தலைவனாக தன் மகன் தக்ஷனுக்கு பட்டாபிஷேகம் செய்தார்.‌ இதனால் அவனது கர்வம் மிதமிஞ்சி வளர்ந்தது.

அவன் பரமேஸ்வரனையும், ப்ரும்மநிஷ்டர்களையும் அவமதித்து வாஜபேயம்‌ என்ற யாகத்தைச் செய்து முடித்தான்.

பின்னர் ப்ருஹஸ்பதிஸவம் என்ற சிறந்த யாகத்தைத் துவங்கினான்.
அந்த வேள்வியில் தேவர்கள், ப்ரும்மரிஷிகள், பித்ருக்கள் அனைவர்க்கும்‌ மரியாதை செய்தான்.

அப்போது தக்ஷான் மகளான ஸதீதேவி ஆகாய மார்கத்தில் சென்ற தேவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து தன் தந்தை செய்யும் வேள்வி பற்றி அறிந்துகொண்டாள்.

கயிலைக்குச் சமீபத்தில் வசிக்கும் கந்தர்வர்கள் அவரது மனைவிகளுடன் நல்ல பட்டாடைகள் உடுத்தி, நகைகள் பல அணிந்து,‌ விமானம் ஏறிச்செல்லும் காட்சியைக் கண்டு தானும் போகவேண்டும் என்று ஆர்வம் கொண்டாள்.
தன்‌ கணவரான பரமேஸ்வரனிடம்‌ சென்று,
தங்கள்‌ மாமனார் இப்போது யாகம்‌நடத்துகிறாராம்.
எல்லா தேவர்களும்‌ அங்குதான் செல்கிறார்கள். நாமும் போகலாமே என்றாள்.

அந்த வேள்விக்கு என் சகோதரிகள்‌ அனைவரும் வருவார்கள். என் தாயையும் அவர்களையும் பார்த்து வெகு காலமாயிற்று. என் தந்தை எனக்களிக்கும் சீர்வரிசைகளை நான் தங்களுடன்‌ சேர்ந்து பெற விரும்புகிறேன்.

மாயையால் விளங்கும்‌ இப்பிரபஞ்சம் தங்களிடமே நிலைத்து விளங்குகிறது. ஆனால் நானோ பெண். உண்மை ஸ்வரூபத்தை அறிய இயலாத பேதை. தங்களின் கருணைக்குப் பாத்திரமானவள்.

தந்தை, உற்ற நண்பர், ஆசிரியர், கணவன் ஆகியோர் வீட்டிற்கு அழைப்பின்றிச் செல்லலாம் என்பது சாஸ்திரமல்லவா?

எனவே தயை கூர்ந்து என் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள் என்றாள்.

அதைக்கேட்டுச் சிரித்த பரமேஸ்வரன்,
தேவீ! நீ சொல்வது உண்மைதான். அன்புள்ளவர் வீட்டிற்கு அவசியம் செல்லலாம். ஆனால், அஹங்காரத்தினால் எண்ணம் மாசடைந்தவர்கள் சான்றோர் பெருமையை உணர்வதில்லை. அவர்கள் வீட்டிற்கு நம் உறவினர்தானே என்றெண்ணி ஒருக்காலும் போகக்கூடாது.

அவர்கள் அவமரியாதையாகப் பேசக்கூடும்.
வில்லால் அடிக்கும் அம்பைக் காட்டிலும் சொல்லால் அடிப்பது அதிக வேதனை தரும்.

சொல்லம்பால் புண்பட்டவனால் அதை மறக்க இயலாது. எபோதும்‌ அதை நினைத்துப் புலம்புவான்.

அழகியே! உன் தந்தை உயர்ந்தவர்தான். ஆனால் எனக்கு உன்னைத் திருமணம் செய்து கொடுத்ததை நினைத்து வருந்துகிறார். இப்போது நீ அங்கு சென்றால் அன்போ மரியாதையோ கிடைக்காது.

ஒருவரை ஒருவர் வணங்குவது அவர் உள்ளுறையும் இறைவனையே சேரும். ஆனால், அஹங்காரம்‌ நிரம்பியவர் மனத்தில் இறைவன் வெளிப் படுவதில்லை.

என்னிடம் பகை கொண்ட உன் தந்தையை நீ சென்று பார்த்தால் அவர் உன்னை அவமதிப்பார்.

நல்ல நிலையில் உள்ளோருக்கு உற்றார் உறவினரால் அவமானம் நேரிட்டால் அது அவரின் திடீர் மரணத்திற்கு காரணமாகிவிடும்.
என்றார்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Sunday, September 23, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 104 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 48

தன்‌ மகளிடம் மிகுந்த அன்பு கொண்ட தக்ஷன்‌ ஏன் மாப்பிள்ளையிடம் பகைமை பாராட்டினான்?

சகல விதமான அசையும் அசையா ஜீவராசிகளின் தந்தை போன்றவர் பரமேஸ்வரன். அவரிடம்‌ கூட ஒருவனால் பகைமை பாராட்ட முடியுமா என்ன?

ஸதி தேவி உயிரை விடும்‌ அளவிற்கு என்ன நேர்ந்தது?

என்று கேட்டார் விதுரர்.
ஹரி பக்தி செய்கிறேன் என்று சிவன் உள்ளிட்ட மற்ற தெய்வங்களிடம் குற்றம்‌ பாராட்டுவதும், சிவ பக்தி செய்கிறேன் என்று ஹரியிடம்‌ தோ‌ஷம் பாராட்டுவதும் தவறு
என்றுணர்த்தவே ஹரியின் அவதாரங்களை விரித்துக் கூற ஆரம்பிக்கும் முன்னரே,
ஹரியிடம் ஏற்பட்ட அளவற்ற பக்தியால் சிவனிடம் தோஷம் பாராட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி, இந்த சரித்திரத்தை வைத்திருக்கிறார் வியாசர்.

மற்ற அனைத்து புராணங்களையும் விடவும் ஸ்ரீ மத் பாகவதம் ஏற்றம் பெறுவதன் காரணமும்‌ இஃதே.

மற்ற தெய்வங்களிட துவேஷமின்றி இஷ்ட தெய்வத்திடம் ப்ரேமையை வைக்கவேண்டும். அப்படிச் செய்பவர்க்கு எல்லா தெய்வங்களும் அனுகூலமாக நிற்கும்.

அனைத்து தேவதா, மனுஷ்ய, ஜீவ ஸ்வரூபங்களும் ஒரே பகவான் என்னும்போது அவர்களின் வெவ்வேறு ரூபங்களை மனத்தில்‌ கொண்டு குற்றம் பாராட்டலாகாது.

ஹரியும் சிவனும் ஒண்ணு.. அறியாதவனுக்கு இரு தெய்வங்களின் அருளும் எட்டாக்கனியே..

மைத்ரேயர் கூறத் துவங்கினார்.

முன்பொரு சமயம் விஸ்வஸ்ருஜகன் என்ற ப்ரஜாபதிகள் நடத்திய ஸத்ரயாகத்தில் முனிவர்கள், தேவர்கள், அக்னிதேவர்கள் அனைவரும் பரிவாரங்களுடன் குழுமினர்.

மகிமை மிக்க பெரியோர் நிறைந்த சபையில் தேஜஸ் மிக்க தக்ஷன் நுழைந்தான். அவனது ஒளி அனைவரையும் கவர்ந்தது. அவனைக் கண்டு ப்ரும்மாவையும், பரமேஸ்வரனையும் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்றனர்.
அனைவரையும்‌ பணிந்து, பின் தன் தந்தையான ப்ரும்மதேவரையும் வணங்கி ஆசனத்தில் அமர்ந்தான்.

தன்முன் அமர்ந்திருக்கும் சிவபெருமான் மட்டும் எழுந்திருக்காதது அவனுக்கு எரிச்சலை ஊட்டியது.

அவரை எரித்துவிடுவான் போலப் பார்த்துக் கொண்டு பேசலானான்.

பெரியோர்களே, நான் பொறாமையினாலோ, கர்வத்தாலோ கூறவில்லை.

இதோ‌ இங்கிருக்கும் சிவன் காந்தக் கண்ணழகியும், இளவரசியுமான என் மகளை அக்னி சாட்சியாக மணந்தான். எனக்கு மருமகன் மற்றும் சீடன் போன்ற இவன் எழுந்து வணங்கி மரியாதை செய்திருக்க வேண்டும். அகம்பாவத்தினால் வாய் வார்த்தையாகக் கூட மரியாதை செய்யவில்லை.

விருப்பமின்றி தகுதியற்றவர்க்கு வேதத்தைச் சொல்லிக் கொடுத்தாற்போல் விருப்பமின்றி என் மகளை இவனுக்குக் கொடுத்தேன்.

அவளுக்கு சற்றும்‌ பொருத்தமில்லாதவன். மயானங்களில் சஞ்சரிக்கிறான். சாம்பலையும், அருவருக்கத்தக்க கபால மாலையும் அணிகிறான். ஆடுகிறான். பாடுகிறான். பித்தன் போல் இருக்கிறான். உண்மையில் பெயரளவில்தான் சிவன். (சிவன் என்றால் மங்களமானவன் என்று பொருள்).

பித்தர்களே இவனுக்குப் பிடித்தமானவர்கள்.

பூதகணங்களின் தலைவன். ப்ரும்மதேவரின் பரிந்துரையால் இவனுக்குப் பெண்ணைக் கொடுத்தேன்.
என்று கத்தினான்.

உண்மையில் இது நிந்தாஸ்துதி ஆகும். ஞானியும், எப்போதும் ஆனந்தத்தில்‌ திளைப்பவரும், தன் சரீர நினைவே அற்றவராக சஞ்சரிப்பவருமான பரமேஸ்வரன் உண்மையில் இதைக் கேட்டு மகிழ்ந்தார்.

எனினும் தக்ஷன் விரோதத்தினால் பேசுகிறான். புறத்தோற்றத்தை மட்டுமே பார்க்கிறான். ஞானஸ்வரூபத்தை அறியவில்லை என்பதால் மௌனமாக இருந்தார்.

அவர் எதுவும் பேசாமல் உணர்வுகளற்று இருப்பதைக் கண்ட தக்ஷன் மேலும் ஆத்திரமடைந்து அவருக்கு சாபம் விடுத்தான்.

இனி இவனுக்கு எந்த யாகத்திலும் தேவர்களுக்குச் சமமாக ஹவிர்பாகம் கிடையாது.

வேள்விச் சாலையில் இருந்த அனைவரும் தக்ஷனைத் தடுத்தனர்.

சிவநிந்தை கேட்டதால் காதுகளைப் பொத்திக் கொண்டனர்.

பரமேஸ்வரன் பேசாமல் இருப்பதைக் கண்டு, தன் தலைவரை ஏசுவதைக் காணச் சகியாமல் கொதித்துப்போன நந்தி தேவர் தக்ஷனுக்கு சாபமிட்டார்.

அறிவிலியான தக்ஷன் ஆன்மா வேறு, பரமாத்மா வேறு என்று பேதம்‌கொண்டான். தன்னைப்‌பற்றிய புகழ்ச்சியில் மயங்கி கர்வம் மிகுந்து ஆத்ம ஸ்வரூபத்தை மறந்தான். இவன் விரைவிலேயே மனிததன்மையை இழந்து ஆட்டுத்தலையைப் பெறட்டும்
என்றார்.

#மஹாரண்யம்‌ ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Saturday, September 22, 2018

ஸ்ரீமத் பாகவத பழம் - 103 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 47

மனுவின் வம்சத்தைத் தொடர்ந்து கூறினார் மைத்ரேயர்.

ப்ரும்மதேவரின் மகன் தக்ஷன் ஸ்வாயம்புவ மனுவின் மகள் ப்ரஸூதியை மணந்தான் என்று பார்த்தோம்.

அவர்களுக்கு கண்ணழகிகளாக பதினாறு மகள்கள் பிறந்தனர்.

தக்ஷன் தன் பதிமூன்று பெண்களை தர்மதேவதைக்கும், அக்னிக்கு ஒரு பெண்ணையும், பித்ரு கணங்களுக்கு ஒரு பெண்ணையும், ஸம்சார பந்தத்தைப் போக்கும் சிவனுக்கு ஒரு பெண்ணையும் திருமணம் செய்து கொடுத்தான்.

ச்ரத்தை, மைத்ரி, தயை, சாந்தி, துஷ்டி, புஷ்டி, கிரியை, உன்னதி, புத்தி, மேதை, திதிக்ஷை, ஹ்ரீ, மூர்த்தி ஆகிய பதிமூன்று பேரும் தர்மதேவனின்‌ மனைவிகள்.

ச்ரத்தை சுபனையும், மைத்ரீ ப்ரஸாதனையும், தயை அபயனையும், சாந்தி சுகனையும், துஷ்டி முதனையும், புஷ்டி செருக்கையும் (அஸூய:) பெற்றார்கள்.

எல்லா நற்குணங்களையும் கொண்ட மூர்த்தி என்பவள் நர, நாராயணன் என்னும் ரிஷிகளைப் பெற்றாள்.

இவ்விருவரும்‌ பிறந்தபோது, உலகெங்கும்‌ செழித்து மகிழ்ந்தது.
தேவர்கள் பூமாரி பொழிந்து துதி செய்தனர்.
அவர்களது துதியைக்‌கேட்டு மகிழ்ந்த நர நாராயணர்கள் கந்தமாதன மலை நோக்கிச் சென்றனர்.

விதுரா!
பகவானின் அம்சமான அவர்களே பூபாரம் தீர்க்கவேண்டி இப்போது யதுவம்சம், குருவம்சம் இரண்டிலுமாக ஸ்ரீக்ருஷ்ணனாகவும், அர்ஜுனனாகவும் அவதாரம்‌ செய்துள்ளார்கள்.

அக்னி தேவனின் மனைவியான ஸ்வாஹா என்பவள் பாவகன், பவமானன், சுசி என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். அவர்கள் வேள்விகளில் ஹோமம் செய்யப்படும் பொருள்களை மட்டுமே புசிப்பார்கள்.
இந்த மூவரிடமிருந்து 45 விதமான அக்னிகள்‌ தோன்றின.

தாத்தாவான அக்னி தேவன், மகன்களான மூன்று பேர், அவர்களின் மகன்களான 45 பேர், ஆகிய நாற்பத்தொன்பது பேரும் அக்னிகளே.
வே‌தம் ஓதும் அறிஞர்கள் இவர்களின் திருப்பெயர்களைச் சொல்லியே இஷ்டிகளைச் செய்கின்றனர்.

அக்னிஷ்வர்த்தாக்கள், பர்ஹிஷதர்கள், ஸோமபர்கள், ஆஜ்யபர்கள் என்று நால்வகை பித்ருதேவதைகள் உளர்.

அவியுணவை உண்பவர்கள் அக்னிகள் என்றும், அந்தணர்களின் திருக்கரங்களில் இடுபவற்றை உண்பவர் அனக்னிகள் என்றும் அறியப்படுவர்.

இந்த பித்ருதேவதைகளின் ஸ்வரூபத்தின் மனைவி ஸ்வதா என்பவள்.

இவர்களது குழந்தைகள் வயுனா, தாரினி என்ற இரு பெண்கள். இவர்கள் வேதம் ஓதியவர்கள். இவர்களுக்கு சந்ததி இல்லை.

பரமேஸ்வரனின் மனைவியான ஸதி பெரும் குணவதி. அவள் எப்போதும் அவருக்குத் தொண்டு செய்வதிலேயே அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தாள். அவளுக்கும் புத்ரன் இல்லை.
குற்றத்தையும்கூட குணமாக ஏற்கும் பரமசிவனிடம் தன் தந்தை தக்ஷன் வீண் பகை பாராட்டியதால் அவள் தன் இளம் பருவத்திலேயே யோகத்தீயினால் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டாள்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..

Friday, September 21, 2018

ஸ்ரீ மத் பாகவத பழம் - 102 விதுர மைத்ரேய ஸம்வாதம் - 46

தொடர்ந்து கர்தம ப்ரஜாபதியின் பெண்களின் வம்சங்களைச் சொன்னார் மைத்ரேயர்.

சிரத்தா என்ற பெண்ணை ஆங்கீரஸுக்கு மணம் முடித்தார் கர்தமர்.
அவர்களுக்கு ஸினீவாலி, குஹூ, ராகா, அனுமதி என்று நான்கு பெண்கள்.

ஸினீவாலி என்பவள் தேய்பிறை சதுர்தசிக்கும், குஹூ அமாவாசைக்கும், ராகா பௌர்ணமிக்கும், அனுமதி வளர்பிறை சதுர்தசிக்கும் அதிதேவதைகள்.

இவர்களைத் தவிர, பகவானைப் போன்ற பெருமை உடைய உதத்யர் என்பவரும், தேவகுரு ப்ருஹஸ்பதியும் ஆங்கீரஸின் புதல்வர்கள் ஆவர்.
அவர்கள் ஸ்வாரோசிஷ மன்வந்தரத்தில் புகழ் பெற்று விளங்கினர்.

ஹவிர்புக் என்ற கர்தமரின் மகளை புலஸ்தியர் மணந்தார்.
இவர்களின் மகன்கள் அகஸ்தியரும், விச்ரவஸ் என்பவரும் ஆவர்.

விச்ரவஸின் மனைவியான இடபிடை என்பவளிடம் யக்ஷர்களின் தலைவரான குபேரன் பிறந்தார். இன்னொரு மனைவியான கைகஸி என்பவளின் புதல்வர்களே ராவணன், கும்பகர்ணன், மற்றும் விபீஷணன் ஆகியோர்.

புலஹரின் மனைவி கதி என்பவள். அவளது புதல்வர்கள் கர்மச்ரேஷ்டன், வரீயான், ஸஹிஷ்ணு ஆகியோர்.

க்ரது என்பவரின் மனைவி க்ரியை. இவள் ப்ரும்மதேஜஸுடன் விளங்கும் வாலகில்யர்கள் என்னும் அறுபதினாயிரம் முனிவர்களைப் பெற்றாள்.

வசிஷ்டரின் மனைவியான ஊர்ஜை அல்லது அருந்ததி சித்ரகேது முதலான ஏழு மகன்களை ஈன்றாள். அவர்கள் ஸப்தரிஷிகள் ஆனார்கள்.

ஸப்தரிஷி என்பதும் பதவிகளே. ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு மஹரிஷிகள் ஸப்தரிஷிகளாக இருக்கின்றனர்.
அவர்கள்
சித்ரகேது, ஸுரோசி, விரஜன், மித்ரன், உல்பணன், வஸுப்ருத்யானன், த்யுமான் ஆகியோர்.

அதர்வா என்ற முனிவரின் பத்னி சித்தி என்பவள் ததீசி‌ முனிவரைப் பெற்றாள். அவரை அசுவசிரஸ் என்றும் அழைப்பர்.

ப்ருகு மஹரிஷியின் மனைவி கியாதி என்பவள். அவள் தாதா, விதாதா ஆகிய இரு மகன்களையும் திருமகளின் அம்சமான லக்ஷ்மி என்ற மகளையும் பெற்றாள்.

மேரு மஹரிஷி ஆயதி, நியதி என்ற தன் புதல்விகளை தாதா, விதாதாவிற்கு‌ மணம் செய்து கொடுத்தார்.

அவர்களுக்கு மிருகண்டு, பிராணன் என்ற புதல்வர்கள் உண்டு
மிருகண்டுவின் மகன்‌ மார்க்கண்டேயர். பிராணனின் மகன் வேதசிரேயஸ். ப்ருகுவின் மற்றொரு புதல்வரான கவியின் மகன் உசனஸ் என்னும் சுக்ராசார்யார்.
விதுரா!
இந்த ஒன்பது முனிவர்களும் ப்ரஜைகளைப் படைத்து உலகத்தைப் போஷித்தனர்.

இந்த வரலாற்றைச் சிரத்தையுடன் கேட்பவர்களின் பாவங்கள் உடனே நீங்கும்.

#மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் இவையும் சிலவே..